அரசு திட்டங்களில் இரட்டை சிலை சின்னம்: மக்கள் நிதியா? அ.தி.மு.க. நிறைவேற்றியதா?: கலைஞர்
சென்னை: அரசு பேருந்துகளில் இரட்டை இலை சின்னம் போடப்பட்டுள்ளது. குடிநீர் பாட்டிலிலும் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மக்கள் நிதியிலிருந்து செய்யப்பட்டதா? அல்லது அ.தி.மு.க. நிறைவேற்றியதா? என தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''2001-2002 முதல் 2005-2006 வரையிலான ஐந்தாண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட புதிய பேருந்துகள் 5,608 மட்டுமே. 2006-2007 முதல் 2010-2011 வரை ஐந்தாண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட புதிய பேருந்துகள் 15,137. 2001 முதல் 2005 வரையிலான ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வழித்தடங்கள் 156. ஆனால் 2006 முதல் 2011 வரையிலான ஐந்தாண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வழித் தடங்கள் 1,628.
மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா உரையில் அவருடைய ஆட்சியில் 16,661 ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்றும், பணியில் இருக்கும்போது இறந்துபோன பணியாளர்களின் 346 வாரிசுகள் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் பாராட்டிக் கொண்டுள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் ஐந்தாண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக போக்குவரத்துத் துறையில் 43,592 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். கருணை அடிப்படையில் 1,183 பேர் பணி நியமனம் கழக ஆட்சியில் பெற்றார்கள். போக்குவரத்துக் கழகங்களை நாட்டுடைமை ஆக்கியதே தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் என்பது சரித்திரம் மறக்காத சோஷலிசச் சாதனையாகும்.
2006 ஆம் ஆண்டு முதல் 2011 மே மாதம் வரை நடைபெற்ற தி.மு.க. ஆட்சியில் பேருந்துக் கட்டணம் ஒரு பைசாகூட உயர்த்தப்படவில்லை.
முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ள அரசுப் பேருந்துகளில் எல்லாம் இரட்டை இலை சின்னம் போடப்பட்டுள்ளது. அதைப்போலவே அம்மா குடிநீர் பாட்டில் திட்டம் கொண்டு வந்தபோதும் அதில் இரட்டை இலை சின்னத்தைப் பொறித்திருப்பதாகச் செய்தி வந்தது. எனவே இந்தத் திட்டங்கள் எல்லாம் மக்கள் நிதியிலிருந்து அரசின் சார்பில் நிறைவேற்றப்படுகின்றனவா? அல்லது அ.தி.மு.க. எனும் அரசியல் கட்சியின் சார்பில் தனிப்பட்ட முறையில் நிறைவேற்றப்படுகின்றனவா?'' எனக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment