கீரை சாகுபடிக்கு அதிகம் தேவைப்படுவதுநன்கு மக்கிய தொழு உரமாகும். எரு நன்கு மக்கி இருக்கும் போது இதை இடும் இடத்தில் மண் இளக்கமாக இருக்கும். அதோடு எரு இட்ட இடத்தில் வடிகால் வசதி நன்றாக இருக்கும். இயற்கை எருவை சாகுபடி காலத்திற்கு முன்பாகவே சேகரித்து வைத்துக்கொண்டு அதன்மேல் சூரிய ஒளி படாமல் பாதுகாக்க வேண்டும். இதோடு வளமான செம்மண், மணல் இவைகளையும் சேகரம் செய்து இதனுடன் எருவினை நன்கு கலந்து சாகுபடி செய்யும் பாத்திகளுக்கு இடலாம்.
எருவினை பாத்தியில் போட்டால் மட்டும் போதாது. அவைகளை சாகுபடி செய்யும் நிலங்களுக்கு இட்ட உடனே பாத்தியை நன்கு கொத்திவிட வேண்டும். அப்போதுதான் எரு நன்கு மண்ணோடு கலந்து கீரை செடிகளை தளதளவென்று வளர வைக்கும். கீரை சாகுபடியை இயற்கை உர உதவியுடன் செய்வது நல்லது. இருப்பினும் தொடர்ந்து ஒரே இடத்தில் கீரை சாகுபடி செய்து வருவதால் இயற்கை உரங்களோடு தேவையான அளவு ரசாயன உரங்களை இடலாம்.
சாகுபடிசெய்யும் கீரை முளைக்கீரையாக அல்லது சிறுகீரையாக இருக்கலாம். இவைகளின் வயது 24 நாட்களாக இருக்குமா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். விதைவிதைத்த 21, 22, 23, 24 நாட்களில் கீரைச் செடிகளை வேரோடு பிடுங்கலாம். ஒரு நாளைக்கு 300 கட்டுகள் கீரை கிடைக்கும். எட்டு சென்ட் பரப்பில் நான்கு அறுவடை களில் 1200 கட்டுகள் கிடைக்கும். எட்டு சென்ட் நிலத்தில் ஒரு கிலோ விதையை விதைக்கலாம்.
பொருளாதாரம்: கீரை சாகுபடியில் கிடைக்கும் வருவாய் விவசாயி ஒருவர் எவ்வளவு பாத்திகளில் கீரை சாகுபடி செய்கிறார் என்பதையும் எத்தனை மாதங்கள் சாகுபடி செய்கிறார் என்பதையும் பொருத்து இருக்கும். முளைக்கீரை சாகுபடி பரப்பு 8 சென்ட். நிலம் தயாரிக்க ரூ.100, பாத்திகள் அமைக்க ரூ.75, விதை ஒரு கிலோ ரூ.180, இயற்கை உரம் ரூ.150, டிஏபி (4கிலோ) ரூ.70, யூரியா ரூ.50, பயிர் பாதுகாப்பு ரூ.50. மொத்த செலவு ரூ.675.
8 சென்டில் கிடைக்கும் 1200 கட்டுகள் ( 4 அறுவடைகள்) (ஒருகட்டின் விலை ரூ.1.50 வீதம்) ரூ.1,800.00
முள்ளங்கி சாகுபடி: கீரை சாகுபடிசெய்பவர்கள் முள்ளங்கியையும் சாகுபடி செய்வார்கள். 10 சென்ட் நிலத்தில் 400 கிலோ மகசூல் கிடைக்கும். 400 கிலோ முள்ளங்கியின் மதிப்பு ரூ.2000. முள்ளங்கி சாகுபடி செலவு ரூ.500 போக நிகர லாபம் ரூ.1,500 கிடைக்கும். இந்த லாபத்தை கீரை விவசாயிகள் மறுபடியும் கீரை சாகுபடிக்கு உபயோகிக்கின்றனர்.
கீரை சாகுபடியில் கிராமப் பெண்கள்: கிராமங்களில் நிலமில்லாத ஏழைப்பெண்கள் குறிப்பாக விவசாயத்தில் கூலி வேலை செய்பவர்கள் தங்கள் வருமானத்தில் அதிக விலை கொண்ட காய்கறிகளை வாங்க இயலாது. இவர்களுக்கு கீரை சாகுபடியில் நல்ல பாண்டித்யம் உள்ளது. தங்கள் குடிசைகளுக்கு அருகில் சிறிய இடங்களில் முருங்கையை வளர்த்து அதனடியில் முளைக்கீரை, முள்ளங்கி இவைகளை சாகுபடி செய்து நல்ல பலனை அடைகின்றனர். முருங்கையில் கிடைக்கும் காய்களை விற்பனை செய்து வருமானம் பெற்று மகிழ்ச்சி அடைகின்றனர்.
-எஸ்.எஸ்.நாகராஜன்
No comments:
Post a Comment